சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.33½ லட்சம் கோடிக்கு திட்டங்கள்: யோகி ஆதித்யநாத் !!
உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்களின் அதிபர்கள் கலந்து கொண்டு உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர். இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் இந்த மாநாட்டில் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரூ.33.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டு உள்ளன. இது மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவும். இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் முதலீட்டுக்கு பாதுகாப்பான இடமாக மாநிலம் உருவாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் முன்பெல்லாம் தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் மட்டுமே முதலீடுகள் குவிந்தன.
ஆனால் இந்த மாநாட்டின் மூலம் மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீட்டு திட்டங்கள் கிடைத்து உள்ளன. இந்த முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில மந்திரிகளும், அதிகாரிகளும் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவார்கள். ‘சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம்’ என்ற பிரதமர் மோடியின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் மாநில அரசு பணியாற்றி வருகிறது.
தொழில்முனைவோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலை முதல் களத்தில் தங்கள் முதலீட்டை வழங்குவது வரை அவர்களுக்கு உதவுவதற்காக ‘ஊக்குவிப்பு கண்காணிப்பு அமைப்பு’ போன்ற வெளிப்படையான ஒற்றைச் சாளர அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இத்தகைய சிறந்த சட்டம்-ஒழுங்கு நிலவரம், முதலீட்டாளர்களை இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கிறது. புதிய இந்தியாவின் ஒரு வளர்ந்த மாநிலமாக உத்தரபிரதேசத்தை மாற்ற மாநில அரசு உறுதிபூண்டுள்ளது இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.