டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது- உச்ச நீதிமன்றம் அதிரடி!!
டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் விஷயத்தில், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது. மூன்று முறை முயற்சி செய்தும் தேர்தலை நடத்துவதில் தோல்வியே ஏற்பட்டது. அடுத்து வரும் வியாழக்கிழமை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி துணைநிலை விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது துணைநிலை ஆளுநர் அலுவலகம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெய் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பிப்ரவரி 16ல் நடப்பதாக இருந்த மேயர் தேர்தல பிப்ரவரி 17ம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் நடத்த உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து 17ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் அரசியலமைப்பு விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக நேர்மையற்ற தந்திரங்களை கையாள்வதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.