நாகர்கோவிலில் வாகன சோதனையின்போது போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர்கள்!!
குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.பெண்கள் பலரும் இந்த வாகன சோதனையில் சிக்கினார்கள். குடும்பத்தோடு வந்தவர்களும் ஹெல்மெட் அணியாமல் வந்து போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை தடுத்த போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை எடுத்து வருமாறு தெரிவித்தனர். அப்போது போலீசார் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக கூறி அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
நடுரோட்டில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த பொது மக்களை முகம் சுழிக்க செய்தது. மேலும் வாகன சோதனையில் சிக்கியிருந்த பொதுமக்கள் பலரும் வாலிபரின் இந்த செயலை செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.போலீசாரை வாலிபர் வசைபாடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.