மாநகர சபை பாதீடு 2023 முதல்வர் இ. ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது!!
பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 9:30 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் பரப்பில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த போது, அதன் முதலாவது சமர்ப்பணத்தின் போதே அது தோற்கடிக்கப்பட்டது. அதனால் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் வரவு செலவுத் திட்டத்தை இரண்டாவது தடவை சமர்ப்பிக்காமல் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதன் பின்னர், புதிய முதல்வராக ஜனவரி 20 ஆம் திகதி தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட் உள்ளூராட்சி ஆணையாளரால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார். அன்றைய நாளிலிருந்து 14 நாட்களுக்கு புதிய முதல்வர் வரவு – செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படாமலே, அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு ஆளுநர் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகாரமளித்திருந்தார்.
இந் நிலையில், புதிய முதல்வரின் வரவு செலவுத் திட்டம் நாளை சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டதாக இல்லை. காலத்துக்குக் காலம் ஏற்படுகின்ற இடைக்காலக் கூட்டுகளே ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானித்து வந்தன. கடந்த வாரம் ஒரு உறுப்பினர் விபத்து காரணமாக உயிரிழந்திருப்பதனால் உறுப்பினர் எண்ணிக்கை 44 ஆகியுள்ளது.
இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அங்கம் வகிக்கும் 16 பேரில் ஒரு உறுப்பினர் மணிவண்ணன் அணியின் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பதனால், கடைசியாக இடம்பெற்ற முதல்வர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் அவர் பங்குபற்றவில்லை. மீதமுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமை்ப்பின் 15 உறுப்பினர்களில் மூவர் புளொட் சார்பாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், மூவர் ரெலோ சார்பாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள். இவர்களும் தற்போது தனித்துக் களமிறங்கும் காரணத்தால் நாளைய வாக்கெடுப்பில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை.
நிச்சயமாக எதிர்பார்க்கப்படும் 12 உறுப்பினர்களோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினர் மற்றும், ஈ.பி.டி.பி அதிருப்திக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் என 18 உறுப்பினர்கள் மட்டுமே வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மணி அணியின் பத்து உறுப்பினர்கள் மற்றும் ஈ.பி.டி.பி யின் 13 உறுப்பினர்கள் நிச்சயமாக வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்குபற்ற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்து, வாக்கெடுப்பில் பங்குபற்றினால் வாக்கெடுப்பு தோல்வியடையும் சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுகின்றன.
ஆனாலும், முதல்வர் தெரிவு சட்ட விரோதமானது என்று முதல்வரை இடைநிறுத்த வேண்டும் என இடைக்காலத் தடை கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள மணிவண்ணன் அணியினர் நாளைய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, எதிர்தே தான் வாக்களித்தாலும், முதல்வர் தெரிவை அவர்கள் சட்ட விரோதமானது என சவாலுக்குட்படுத்தியிருப்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே 10 உறுப்பினர்கள் சபைக்குச் செல்லாமல் விடுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாகும். மறுபுறத்தே நிறைவெண் (கோரம்) இல்லாமல் கூட்டத்தை இரத்துச் செய்யும் நகர்வு கூட நாளை சரி வராது. ஏனெனில் கூட்டத்துக்கான நிறைவெண் 15 மாத்திரமே ஆகும்
எனவே வாக்களிப்பில் கலந்து கொள்பவர்களில் பெரும்பான்மையுடன் – 18 வாக்குகளைப் பெற்று வரவு – செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”