வானில் 20,000 அடி உயரத்தில் 4வது பறக்கும் மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: உளவு பலூனா, ஏலியன்களா?
வட அமெரிக்க வான் பரப்பில் 20,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. தொடர்ந்து 4வது மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில் மர்ம பலூன் ஒன்றை அமெரிக்க ராணுவம் கடந்த 1ம் தேதி சுட்டு வீழ்த்தியது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், அது வானிலையை ஆய்வு செய்ய அனுப்பிய பலூன் என சீனா விளக்கம் அளித்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 4ம் தேதி அலாஸ்கா எல்லையில் 40,000 அடி உயரத்தில் பறந்த சிறிய கார் அளவிலான பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பின்னர் கனடா வான் பரப்பில் பறந்த மர்ம பொருளை கடந்த 11ம் தேதி அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், வட அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தின் ஹூரான் ஏரியின் மீது சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. எட்டு கோணங்களுடன் இருந்த இந்த மர்ம பொருளை அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் தனது எப்-16 போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளது.
அமெரிக்க வான் பரப்பில் இதுபோல் அடுத்தடுத்து மர்ம பொருள்கள் பறப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், முதலில் சுடப்பட்ட சீன உளவு பலூனைப் போல மற்ற பொருட்கள் இல்லை. அதோடு நேற்று முன்தினம் சுடப்பட்ட மர்ம பொருளில் சோலார் பேனல்களோ, உளவு கருவிகளோ இல்லை என அதிகாரிகள் நம்புகின்றனர். எனவே இவைகளும் சீனாவின் உளவு பலூன்களா அல்லது வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் வாகனங்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
* சீனாவில் அத்துமீறிய 10 அமெரிக்க பலூன்கள்
சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க உளவு பலூன்கள் மற்ற நாடுகளின் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைவது வழக்கமான விஷயம். கடந்த ஓராண்டில் சீன வான்வெளியில் அனுமதியின்றி 10 முறை அமெரிக்க பலூன்கள் சட்டவிரோதமாக பறந்துள்ளன. எனவே, அமெரிக்கா முதலில் தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். மோதலை தூண்டும் அதன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார்.