ராணுவ ஒப்பந்தம் பாகிஸ்தான், அமெரிக்கா 4 நாள் பேச்சுவார்த்தை!!
பாகிஸ்தான், அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இரு நாடுகள் இடையே 4 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று வாஷிங்டனில் நடந்தது. இதன் முதல் சுற்று பேச்சுவார்த்தை 2021ம் ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தானில் நடந்தது.
தற்போது 2வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவில் தொடங்கியது. வருகிற வியாழக்கிழமை வரை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் முகமது சயீத் தலைமையிலான பாகிஸ்தான் குழு அங்கு சென்றுள்ளது.
இந்த குழுவில் 2 மேஜர் ஜெனரல்கள், 2 பிரிகேடியர்கள், வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்க கூடுதல் செயலாளர் முகமது முடாசிர் திப்பு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அமெரிக்க பாதுகாப்பு தலைமை அலுவலகமான பென்டகனில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அப்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.