மிகவும் பழமை வாய்ந்த சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: துணைபிரதமர், 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு!!
சிங்கப்பூர் சைனா டவுணில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் 200 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.21.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் மறுசீரமைப்பு ஆலோசகராக உள்ள தலைமை சிற்பி டாக்டர் கே தட்சிணாமூர்த்தி தலைமையில் கோயிலில் இதற்காக ஓராண்டு சீரமைப்பு நடைபெற்றது. இந்த பணியில் 12 சிற்பிகள் பணியாற்றினார்கள்.
மேலும் கைவினைகலைஞர்களும் கருவறைகள், குவிமாடங்கள், கூரை ஓவியங்கள் உள்ளிட்டவற்றை மறுசீரமைப்பு செய்தனர். இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங் உள்பட சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானபக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசபின் தியோ, போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை மற்றும் ஏராளமான தமிழர்களும் இதில் கலந்து கொண்டனர்.