ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு – தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார்!!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர் மீண்டும் அதுபோன்ற புகார் மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம்.
அப்போது 238 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு செய்தீர்களா? என கேட்டிருந்தனர். அதன்படி நாங்கள் பூத் வாரியாக சரிபார்த்தோம். அப்போது 30,056 பேர் உரிய முகவரியில் இல்லை. இறந்துபோன 7,947 பேர் இடம்பெற்று இருந்தனர். 1,009 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று இருந்தனர். இப்படி கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து விட்டோம்.
தற்போது இங்கும் தந்திருக்கிறோம். தற்போது அளித்துள்ள புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் தருவதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பாதுகாப்பு, மத்திய காவல்படையினர் கையில் வரவேண்டும் என தெரிவித்தார்.