கேரளாவில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கின்றனர்- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதில்!!
கர்நாடகாவின் புத்தூர் நகருக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் அது பா.ஜ.க.வால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 1,700 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, அந்த அமைப்பையே நிரந்தரமாக தடை செய்து விட்டார். தேச விரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சி காங்கிரஸ். அவர்களால் ஒரு போதும் கர்நாடகாவிற்கு பாதுகாப்பு கிடைக்காது” என்று கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:- கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது என்றும், கர்நாடகாவை பா.ஜ.க.வால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்றும் அமித்ஷா கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார். அண்டை மாநிலமாக கேரளா இருப்பதால் என்ன தவறு? கேரளாவில் அனைத்து மத மக்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாக வாழ முடியும். ஆனால், கர்நாடகா என்ன நிலைமையில் இருக்கிறது? மதக்கலவரங்கள் நிகழும் மாநிலமாக அது உள்ளது. சிக்மகளூருவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம் கடந்த 2021-ம் ஆண்டு சங் பரிவார் அமைப்பால் தாக்கப்பட்டது.
கர்நாடகாவில் உள்ள சிறுபான்மை மக்கள் சங் பரிவார் அமைப்பினரால் தாக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதால், கேரளாவில் யாருக்கும் எந்த தீங்கும் நேருவதில்லை. இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். கேரளாவைப் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.