குருத்திகாவை தாத்தாவிடம் ஒப்படைக்க அரசு தரப்பில் ஆட்சேபம்- மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு!!
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித் (வயது 22). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர்கள் இருவரும் வினித்தின் உறவினர்கள் முன்னிலையில் நாகர்கோவிலில் திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து நவீன்படேல் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். அதுசம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி விட்டு சென்றபோது வினித்தை தாக்கி குருத்திகாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றனர். இதையடுத்து மனைவியை மீட்டு ஆஜர்படுத்தக்கோரி போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வினித், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 7-ந்தேதி குருத்திகாவை போலீசார் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், அவரை காப்பகத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி, அதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று தென்காசி மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டனர். சில நாட்களாக குருத்திகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தென்காசி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது.
அது தொடர்பான அறிக்கையை போலீசார் நேற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக இருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குருத்திகாவின் தாத்தா மனு தாக்கல் செய்திருந்தார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு வக்கீல் வாதாடுகையில், குருத்திகா மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை நிலுவை சம்பந்தமான தகவல்களை அறிக்கையாக தகவல் செய்யும்படி தென்காசி போலீசாருக்கு உத்தரவிட்டு, இந்த ஆட்கொணர்வு மனுவை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.