பிரியாணி, மது கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்- சுதீஷ் குற்றச்சாட்டு!!
ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் இளைஞர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு இந்த முறை வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டசபையில் குரல் கொடுப்பார். இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏற்கனவே இங்கு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஆனால் பொதுமக்களின் கோரிக்கை எதையும் அவர் நிறைவேற்றவில்லை.
அதேபோல தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும் முதியவர். இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள். இதை பார்த்த பொதுமக்களிடையே அந்த கட்சிகள் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. நாங்கள் ஓட்டு கேட்க செல்லும் போது எங்கள் கட்சி தொண்டர்களுடன் கட்சி தலைவர் விஜயகாந்தின் விசுவாசிகளான பொதுமக்களும் வருகிறார்கள்.
ஓட்டு பதிவின் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு மற்றும் பணம் கொடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் மீறி எங்களது கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்களும் எங்களுக்கு ஆதரவளித்து முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.