ஈரோடு இடைத்தேர்தல்- ஆரத்தி எடுக்க ஆர்வம் காட்டும் பெண்கள்!!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் பிரசாரம் நடந்து வருகிறது. கையில் கட்சி கொடி, சின்னத்துடன் வீதிவீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு முன்பே உள்ளூர் கட்சிகாரர்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தரப்படுகிறது.
அவர்கள் முக்கிய பிரமுகர்களை வரவேற்க கையில் ஆரத்தி, கும்பம், பூக்களுடன் வரிசையாக காத்திருக்கிறார்கள். ஓட்டு கேட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் வந்ததும் ஆரத்தி சுற்றும் பெண்களுக்கு தட்டில் ஒரு அரசியல் கட்சியினர் ரூ.100-ம் மற்றொரு அரசியல் கட்சியினர் ரூ.200-ம் கொடுக்கிறார்கள். இதே போல் பூ தூவி வரவேற்பு கொடுக்கும் பெண்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுக்கப்படுகிறது.
அதோடு இல்லாமல் பிரசாரத்துக்கு சென்றால் ரூ.500, தேர்தல் பணிமனையில் அமர்ந்தால் ரூ.500, கட்சி துண்டு பிரசுரம் வழங்கினால் ரூ.500, கொடி, சின்னத்துடன் சென்று ஆதரவு திரட்டினால் ரூ.500 என பண மழை கொட்டி வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினருமே இந்த பிரசாரத்தில் கிழக்கு தொகுதியில் ஓட்டு இருப்பவர்களை மட்டுமே அழைத்து செல்கிறார்கள்.
ஒரு வீட்டில் மனைவிக்கு மட்டும் ஓட்டு இருந்தால் அவர் பிரசாரத்துக்கு சென்று விட அவரது கணவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொள்கிறார். மொத்தத்தில் கிழக்கு தொகுதி முழுவதும் பண மழை பெய்து வருகிறது. ஆரத்தி எடுப்பது முதல் பிரசாரம் செல்வது வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்து உள்ளனர்.