குறுஞ்செய்தியை பகிர்ந்ததால் பறிகொடுத்தார் !!
வங்கிக் கணக்கை தடை செய்யப்போவதாக குறுஞ்செய்தியை (எஸ்எம்எஸ்) அனுப்பி ஆவண எழுத்தரின் உதவியாளரிடம் ரூ.2.23 இலட்சத்தை பறித்த கும்பல் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் ஹமீது களஞ்சியம்(32). இவர் ஆவண எழுத்தர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், டெக்டாக் (TECDOC) என்ற பெயரில் தங்களின் ஸ்டேட் வங்கி கணக்கை தடை செய்யப்போவதாகவும், அதை தவிர்க்க பான் கார்டு எண்ணை பதிவேற்ற செய்ய வேண்டும் என கடந்த 11 ஆம் திகதி இவரது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது.
இதனால் பயந்து போய், அந்த இணைப்பை கிளிக் செய்த ஹமீது களஞ்சியம் தனது வங்கி கணக்கு விபரம் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண்ணைப் பதிவு செய்தார். இதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக ரூ.2.23 இலட்சம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது.
இதுகுறித்து காவல் துறை இணைய முகவரியில் ஹமீது களஞ்சியம் புகாரளித்தார். இதனடிப்படையில், ராமநாதபுரம் சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.