ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனையை நாடு கடத்திய ஈரான் அரசு!!
ஈரானைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை சாரா காடெம் (வயது 25), சமீபத்தில் கஜகஸ்தானில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடினார். ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஈரானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறி சாரா காடெம், சர்வதேச போட்டியில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஈரான் திரும்ப முடியாது. ஈரான் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
தற்போது அவர் ஸ்பெயினில் குடும்பத்தினருடன் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி (22) என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி அவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார். மாஷாவின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுமார் 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. அரசு எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது. மேலும் பலருக்கு மரண தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.