சிகரெட் வரி விதிப்பை சரிசெய்ய வேண்டும் – எ.சி.றகீம்!!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனக் கூறி அதனை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு மதிப்பீடு 10 பில்லியன் ரூபாவாகும். சிகரெட் வரிக் கொள்கையை அரசு நடைமுறைப்படுத்தி, முறையாக வரி விதித்திருந்தால்,இதுபோன்ற 05 தேர்தல்களை சிரமமின்றி நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசு வழங்கியிருக்க முடியும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி எ.சி.றகீம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியர்கள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் உட்பட பொது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சிகரெட் வரி விதிப்பை சரிசெய்ய வேண்டும்.
பல்வேறு கொள்கைகள், முடிவுகள் மற்றும் பிற காரணங்களால் அரசாங்கம் இழந்து வந்த வருமானத்தை மீட்பதற்காகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும், அரசாங்கம் புதிய வருமான வரிச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் வருமான வரியை உயர்த்தியுள்ளது.
இந்த வருமான வரி உயர்வுக்கு அரசு மற்றும் தனியார் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட வல்லுநர்கள் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை தொழில் வல்லுனர்களை எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பதானது அவர்கள் “நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்” என்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் துறைகளின் உயர் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில் வல்லுநர்கள், அவர்களது தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களும் வருமான வரி உயர்வுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வரிக் கொள்கையை அமுல்படுத்துவதால், அரசின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இந்த முடிவு, அரசுக்கு தர்மசங்கடத்தையும், மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிகரெட்டுக்கு வரி விதிக்கும் விஞ்ஞானரீதியான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தாமையினால், இவ்ஆண்டு அரசுக்கு கிடைக்கக்கூடிய சுமார் 50 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்காமல் போகும் என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன- என்றார்.
சிகரெட்டுக்கு அறிவியல் பூர்வமான வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட்டிருந்தால், வருமான வரி உயர்வைக் குறைத்து அரசு எதிர்பார்க்கும் வருமானத்தைப் அதிகரிக்க கூடியதாக இருந்திருக்கும்;. மக்களையும், அரசாங்கத்தையும் அசௌகரியத்திற்குள்ளாக்கும் இந்த வரிக் கொள்கைக்குப் பதிலாக, பொதுமக்களைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே நிதி அமைச்சின் ஆலோசகர்களின் தலையாய பணியாக இருக்க வேண்டும்.
ஆனால், புகையிலை நிறுவனத்திலிருந்து அரசிற்கு கிடைத்திருக்க கூடிய அதிகூடிய வரி வருமானத் தொகையை இழக்கச் செய்து இலங்கை புகையிலை நிறுவனம், என்ற பெயரில் இயங்கிவரும், 84 வீதமான பங்குகளின் உரிமத்தை கொண்ட பன்னாட்டு நிறுவனமான பிரித்தானிய அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றி வருவதையே நிதி அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஆலோசகர்களும் கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வந்துள்ளனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்நிலையம் வடபகுதி இணைப்பாளர் ஆ.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இவ்வாறு இழக்கப்படும் வரியை சரியான முறையில் அறவிட்டு வைத்தியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், வங்கியாளர்கள், அரச மற்றும் தனியார் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்நிலையம்
நிகழ்ச்சிதிட்ட அதிகாரி நிதர்சனா செல்லத்துரை தெரிவித்தார்.