விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண்!!
சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு ‘விஷன் 2030’ என்ற விண்வெளி திட்டத்தை தொடங்கியது. இதில் குறுகிய-நீண்ட விண்வெளி பயணங்களுக்காக வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. சமீப காலமாக விண்வெளி திட்டத்துகான பணிகளை சவுதி அரேபியா தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது.
இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் அரபு நாடு என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் விண்வெளிக்கு முதல் முறையாக பெண் வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான ரயானா பர்னாவி, சக நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல்கர்னி உள்பட 4 பேர், ஏ.எக்ஸ்-2 விண்வெளி பயணத்தில் இணைய உள்ளதாக சவுதி அரேபியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளனர். ரயானா பர்னாவி உள்பட 4 பேர் பயணிக்க உள்ள விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது. 33 வயதான ரயானா பர்னாவி, நியூசிலாந்தில் டண் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அல்பை சல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றார்.
புற்று நோய் ஸ்டெம் செல்கள் ஆராய்ச்சியில் 9 ஆண்டு அனுபவம் உள்ளவர். அவர் விண்வெளிக்கு செல்லும் முதல் அரபு பெண் என்ற சிறப்பை பெறுகிறார். 1985-ம் ஆண்டு சவுதி இளரசரும், விமானப்படை விமானியுமான சுல்தான் பின் சுல்மான் பின் அப்துல் அஜிஸ் அமெரிக்கா ஏற்பாடு செய்த விண்வெளி பயணத்தில் பங்கேற்று விண்வெளிக்கு சென்ற முதல் அரபு இஸ்லாமியர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.