;
Athirady Tamil News

13 ஆவது திருத்தம் குறித்த இறுதி நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் மீண்டும் வீதிக்கிறங்கி போராடுவோம் – ஓமல்பே சோபித தேரர்!!

0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் இல்லாவிடின் மீண்டும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் கோரவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் பிரவேசத்திற்காக அதிகார பகிர்வு விவகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தல் காலத்தில் அதிகார பகிர்வு பரவலாக பேசப்படும் அதன் பின்னர் மறக்கப்படும்.

அதிகார பகிர்வுக்கு பெரும்பான்மை சமூகத்தினர் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள்.

இருப்பினும் தங்களின் அரசியல் தேவைகளுக்காக அதிகார பகிர்வு விவகாரத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகார பகிர்வை வழங்குவது சிறந்ததாக அமையாது.

நாட்டில் இல்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் நேர்ந்தது என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டும்.

பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை போராளிகள் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் யுத்த சுவடுகள் மற்றும் தாக்கங்கள் தொடர்வது முறையற்றதாகும்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குவோம்.13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசியல் நோக்கத்திற்காக இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சித்தால் மீண்டும் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.