தேர்தலை நடத்தாமலிருக்க எந்தவகையிலும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை : அமைச்சரவை!!
தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு எந்தவகையிலும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை. தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மாதாந்த அரச வருமானம் அத்தியாவசிய தேவைகளுக்காகவே செலவிடப்படுகின்றது.
நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டுமெனில் பணத்தை அச்சிடவும் முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பணம் செலுத்தப்படும் வரை வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இடைநிறுத்தப்படும் என அரசாங்க அச்சகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியா என்று நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேர்தலைக் காலம் தாழ்த்தும் நிலைப்பாடு அரசாங்கத்திடம் இல்லை. மாதாந்தம் கிடைக்கப் பெறும் வருமானம் தொடர்பிலும் , அவை எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பது தொடர்பிலும் நாம் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றோம்.
கடந்த அரசாங்கங்கள் கடன் பெற்றும் , பணத்தை அச்சிட்டும் நாட்டை நிர்வகித்து வந்தன. எனினும் நாம் தற்போது கடனை மீள செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளமையினால் மீண்டும் கடன் பெற முடியாது. பணத்தை அச்சிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட முடியாது.
அதன் அடிப்படையில் என்றுமிலலாதவாறு திறைசேரி நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இவ்வாறான பிரச்சினைகளை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உணரவில்லை.
சர்வதேச நிறுவனங்களின் சேவைகளையும் பெற்றுக் கொண்டு இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கே அனைவரும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
முதற்காலாண்டுக்குள் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. இது அரசியல் பிரச்சினையல்ல.
இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேசத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய இந்த பிரச்சினைகள் கொள்கை ரீதியில் தீர்க்கப்பட வேண்டுமே தவிர , அரசியல் ரீதியாக அல்ல.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த நிதி நிலைமை தொடர்பில் திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பணம் அச்சிடாமல் நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக புதிய மத்திய வங்கி சட்ட மூலமும் தயாரிக்கப்பட்டுள்ளது அவ்வாறில்லை என்றால் நாம் உலகில் தனித்து விடப்பட்ட நாடாவோம் என்றார்.