அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பக்கிச்சூடு: 3 பேர் பலி, 5 பேர் காயம்!!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் காவல்துறையின் துணைத் தலைவர் க்ரிஷ் ரோஸ்மான் கூறுகையில்,”பல்கலைக்கழகத்தில் பெர்கி ஹால் எனப்படும் கல்விக்கூட வளாகத்திலும், மிச்சிக்கன் மாநில பல்கலைக்கழக ஒன்றிய வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இரவு 8 மணிக்கு மேல் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு போலீஸார் பதிலடி கொடுத்துள்ளனர். இரண்டு இடங்களில் நடந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த பின்னர், போலீஸார் பல்கலைக்கழகத்தின் பல இடங்களில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் ஊழியர்களை வெளியேறச்செய்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் மேலும் யாரும் காயமடைந்திருக்கிறார்களா என்றும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் தேடினர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர் சுருட்டை முடியுடன் குட்டையாக இருந்திருக்கிறார். முகமூடி அணிந்திருந்த அவர் பல்கலை ஒன்றிய வளாகத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். இவ்வாறு காவல்துறை துணைத்தலைவர் தெரிவித்தார்.
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று. அதன் கிழக்கு லான்சிங் வளாகத்தில் 50,000 பட்டதாரி மற்றும் இளநிலை மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பல்கலைக்கழகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மீண்டும் கல்வி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: கடந்த 2021ம் ஆண்டு நவ.30 ம் தேதி மிச்சிகனின் கிழக்கு லான்சிங்கிலிருந்து 80 மைல் தொலைவில் உள்ள ஓக்லேண்ட் கவுண்டியில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு உயர்நிலைப்பள்ளியில், 15 வயது மாணவன் நடத்திய துப்பாகிச்சூட்டில், 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆறுபேர் காயமடைந்தனர்.
தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்: ஜனவரி 23ம் தேதி அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். அதற்கு முன்பாக ஜன.21ம் தேதி, கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகமாகவே பதிவாகி வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு 647 மாஸ் ஷூட்டிங் சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளது. துப்பாக்கி வன்முறை ஆவண காப்பக தகவலின்படி 2022-ல் அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 44 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலையால் இறந்தவர்களாவர்.