தென் சீனக் கடலில் சூழ்ச்சி செய்யும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!!
தென் சீனக் கடலில் ஆபத்தான சூழ்ச்சிகளை சீனா செய்வதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை கூறும்போது, ”பிப்ரவரி 6-ஆம் தேதி அன்று எங்கள் கப்பலான மலாபாஸ்குவா, சீனக் கடலோர காவல் படையைச் சந்தித்தது. சீனாவின் கடலோர காவல் படை கப்பல் எங்கள் கப்பலிடமிருந்து சில கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. அப்போது எங்கள் கப்பல் மீது சீனவின் கடலோர காவல் படை லேசரை காண்பித்தது. இதனால், எங்கள் கப்பலில் இருந்தவர்களுக்கு பார்வை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மாலுமிகள் பாதிக்கப்பட்டனர்.
எங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு உணவளிக்க வந்த கப்பலை சீனா தாக்கியுள்ளது. இது பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் எங்களது இறையாண்மையை பறிக்கும் செயல். தென் சீன கடலில் சீனா ஆபத்தான சூழ்ச்சிகளை செய்வதாக தெரிகிறது. கடந்த நவம்பர் மாதமும் இவ்வாறே எங்கள் கப்பலை சீனா தடுத்து நிறுத்தியது” என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் போக்குவரத்தின் முக்கியப் பாதையாக திகழும் தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதேபோல அந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள தைவான், தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனா வாதிட்டு வருகிறது.
இந்த இரு விவகாரங்களிலும் சர்வதேச நாடுகள் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இதில் தென் சீனக் கடல் பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று அமெரிக்கா கூறி வருகிறது. தங்கள் கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.