அரச நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலுக்கு அரச நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பாக ஆணைக்குழு நேற்று (13) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அலுவலகம், பாடசாலை, உள்ளூராட்சிட்சி அமைப்பு, பொது நிறுவனம் அல்லது சட்டப்பூர்வ அமைப்பு ஆகியவற்றில் வேட்பாளர்கள் சார்பாக ஆதரவு கோருவது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது அல்லது இதுபோன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.
எனவே, அரசியல்வாதிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் தொழில்சார் சங்கங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.