சரக்கு ரெயில் காணாமல் போனதாக வைரலாக பரவும் செய்தி… விளக்கம் அளித்த ரெயில்வே நிர்வாகம்!!
நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி 90 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரெயிலை காணவில்லை என இணையதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மிஹான் சரக்கு மையத்தில் இருந்து கடந்த 1 தேதி பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.
90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட அந்த ரெயில் நான்கைந்து நாட்களுக்குள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் சென்று சேர்ந்திருக்க வேண்டும். புறப்பட்டு 12 நாட்கள் ஆகியும், ரெயில் சேர வேண்டிய இடத்தை சென்றடையவில்லை எனவும் காணாமல் போனதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 1 ஆம் தேதி நாசிக் மற்றும் கல்யாண் இடையே ஊம்பர்மாலி நிலையத்தில், கடைசியாக சரக்கு ரெயில் வந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அதன்பிறகு அதன் இருப்பிடம் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை” என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் சரக்கு ரெயில் காணாமல் போனதாக பரவி வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என ரெயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரெயில்வே நிர்வாகம், ரெயில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகு செய்தியை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. தவறான தகவல் பரவியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.