ஆரணி பேரூராட்சியில் வெறி நோய் தடுப்பூசி முகாம்!!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறி நோயினை தடுப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,பொன்னேரி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணா தலைமை தாங்கினார். ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் வக்கீல் சுகுமார், நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில்,133 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர்,பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வெறி நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.அப்பொழுது பேசிய டாக்டர்கள் மெய்ஞான சுந்தரி, கிரிதரன், சோபனா, சித்ரா ஆகியோர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினர்.
மேலும், வெறி நோய் தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினர். முன்னதாக அனைவரையும் கால்நடை ஆய்வாளர்கள் கீதா, பிரபாவதி ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தனசேகர், பசுபதி, ஆறுமுகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில், செல்வி நன்றி கூறினார்.