கடத்தப்பட்ட நியூசிலாந்து விமானியின் படங்கள் வெளியீடு..!
இந்தோனேஷியாவின் பப்புவா பிராந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு, பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நியூசிலாந்து விமானி காணப்படும் படங்களை கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பிலிப் மெஹ்ர்டென்ஸ் எனும் இந்த விமானி, இந்தோனேஷியாவின் சுசி எயார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்தவர்.
கடந்த 7 ஆம் திகதி, பப்புவா பிராந்தியத்திலுள்ள தூரப்பிரதேசமொன்றிலுள்ள பரோ விமான நிலையத்தில் தனது விமானத்தை அவர் தரையிறக்கிய பின்னர் அவ்விமானியும் விமானத்திலிருந்த பயணிகளும் திரும்பிவரவில்லை.
மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் எனும் கிளர்ச்சி அமைப்பானது அவரை சிறைபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அவரின் விமானத்தையும் எரித்ததாக தெரிவித்துள்ளது. அத்துடன், விமானி மெஹ்ர்டென்ஸ் காணப்படும் படங்களையும் மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிக்கள், அம்புகள் முதலான ஆயுதங்களை ஏந்திய கிளர்ச்சியாளர்களுடன் விமானி மெஹ்ர்டென்ஸ் அப்படங்களில் காணப்படுகிறார்.
பரோ விமான நிலையத்துக்கு விமானங்கள் வருவது நிறுத்தப்பட வேண்டும் என மேற்படி கிளர்ச்சியாளர்கள் முன்னர் கூறியதுடன், பப்புவாவின் சுதந்திரத்தை இந்தோனேஷியா உறுதிப்படுத்தும் வரை விமானி மெஹ்ர்டென்ஸ் விடுவிக்கப்பட மாட்டார் எனவும் மேற்படி கிளர்ச்சியாளர்கள் முன்னர் கூறியிருந்தனர்.
பப்புவா தீவின் கிழக்குப் பகுதியில் பப்புவா நியூகினி நாடு அமைந்துள்ளது. அத்தீன் மேற்குப் பகுதி இந்தோனேஷியாவின் ஒரு பகுதியாக உள்ளது.
அப்பகுதியை தனி நாடாக்குவதற்காக மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் எனும் கிளர்ச்சி அமைப்பு போராடி வருகிறது.