விமானத்தில் தப்பிய அரியானாவை சேர்ந்த ஏ.டி.எம் கொள்ளை கும்பல்- மேலும் 10 பேரிடம் விசாரணை: ஐ.ஜி பேட்டி!!
விமானத்தில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளை கும்பல் மேலும் 10 பேரிடம் விசாரணை திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில், அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், கொள்ளையர்கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக ஐ.ஜி.கண்ணன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லாட்ஜில் தங்க அறை கொடுத்த மேலாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.களை கொள்ளை கும்பல் நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
இங்கு கொள்ளையடித்து விட்டு பெங்களூர் சென்று விமானம் மூலம் அரியானா சென்றுள்ளனர். இது தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த 2 பேர், அரியானாவை சேர்ந்த 2 பேர், குஜராத்தை சேர்ந்த 6 பேர் என 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளையில் ஈடுபட்டது அரியானா கும்பல் தான். மற்ற மாநிலத்தவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.