;
Athirady Tamil News

தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும் : மஹிந்த தேசப்பிரிய!!

0

தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (15) மாலை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அரச அச்சகத்தின் செலவு 400 அல்லது 500 மில்லியன் ரூபாய்களாகும். அதற்கான முற்பணம் மாத்திரமே தேர்தலுக்கு முன்னர் செலுத்தப்படும். அவ்வாறே கடந்த காலங்களில் இடம்பெற்றது. 150 மில்லியன் ரூபாய் முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். 10 பில்லியன் அல்லது 8 பில்லியனே தேர்தலுக்கு முழுமையாக செலவாகும். அவை ஒரே தடவையில் கோரப்படாது.

தேர்தலுக்கு முன்னதாக இரண்டரை அல்லது 3 பில்லியனே தேவைப்படும். அந்த தொகையை படிப்படியாக செலுத்த முடியும். தேர்தலுக்கான நிதியில் நூற்றுக்கு 60 வீதம் தேர்தலுக்கு பின்னரே தேவைப்படும். அப்படியெனில் 3 பில்லியன் கிடைத்தால் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு இல்லாது விட்டால் சட்ட திட்டத்திற்கு அமைய குறுகிய காலத்திற்கு தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரிடும்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஊடாக முற்பணத்தை மேலதிகமாக பெற முடியும். காசு கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுவதால் மின்கட்டணச் செலவும் குறைவு.

அரச உத்தியோகத்தர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை எடுத்துவருமாறு கோரி செலவை மட்டுப்படுத்த முடியும். ஆகவே, எல்லோருடைய ஆதரவுடனும் இந்த தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.