;
Athirady Tamil News

ஆட்கொணர்வு மனு விசாரணை: குருத்திகாவை பிற்பகலில் ஆஜர்படுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!!

0

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்க்கிறேன். இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவரது மகளான குருத்திகாபட்டேலும், நானும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தார். இதனையடுத்து ஜனவரி 4-ந் தேதி நானும், எனது மனைவி குருத்திகாபட்டேலும் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானோம்.

விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து நான் அவரை அழைத்து சென்றேன். இந்நிலையில் கடந்த 14-ந் தேதியன்று எனது மனைவியுடன் தென்காசியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவரது மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனா். இது குறித்து நான் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். அந்த மனு மீதான விசாரணைக்காக ஜனவரி 25-ந் தேதி நானும், குருத்திகாபட்டேலும், தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினேன்.

ஆனால், நவீன்பட்டேல் மாலையில் போலீஸ் நிலையம் வருவதாகக் கூறி சென்றார். இந்த நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது நவீன்பட்டேல், தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி குருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர். நான் இது குறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தேன். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், குருத்திகா பட்டேலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேலை கடத்தி சென்றுவிட்டனர். எனவே, குருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட குருத்திகா பட்டேல் அனுப்பினால் விசாரணை பாதிக்கும். மேலும் குருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குருத்திகா பட்டேலை அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறட்டும். இது ஆட்கொணர்வு மனு. சம்பந்தப்பட்ட பெண் மேஜராக உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.