தனி லிங்க பெருமாளுக்கு நேர்த்திக்காக 32 நாடகங்கள்: மகா சிவராத்திரி முதல் தினமும் நடக்கிறது !!
திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பழமையான தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் கிடாவெட்டுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், பால்குடம், பறவை காவடி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் தனி லிங்கபெருமாளுக்கு பக்தர்கள் நாடகங்கள் நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது விசேஷம். நாடகங்கள் நடத்துவதற்காகவே கோவில் வளாகத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நேர்த்திக்காக நடத்தக்கூடிய நாடகங்களை வலையங்குளம் கிராம மக்கள் மட்டுமல்லாது சோளங்குருணி, கொம்பாடி உலகாணி நல்லூர், எலியார்பத்தி, பாரப்பத்தி உள்பட பல கிராம மக்கள் கண்டுரசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 30 முதல் 70 நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நேர்த்திக்கான நாடகங்கள் நடத்த கோவிலில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நாடகங்கள் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பினும் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதால் 32 நாடங்கள் நடத்துவது என்று ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வழக்கம்போல வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை. கோவில் வாசல் முன்பு நின்று பெண்பக்தர்கள் வழிபடுகின்றனர். பெண் பக்தர்கள் வாசலை தவிர்த்து கோவிலுக்குள் செல்லாதது இந்த கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.