யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்றா?
யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்று ஏற்பட்டு வயிற்றோட்டம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. குடிநீர் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் தங்கியிருப்பவர்கள் சிலருக்கு வயிற்றோட்டம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஒவ்வாமை தொடர்ச்சியாக ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் குடிநீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் குளோரின் இடப்பட்டுள்ளது. எனினும் யாழ்.போதனா வைத்தியசாலையின் குடிநீர் தேவைக்கான ஒரு பகுதியை யாழ்.மாநகரசபை வழங்கும் நிலையில் எந்த நீரில் கிருமி தொற்று உள்ளது என்பது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையிடம் இரு நீர் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர் ஜெகதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, நீர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டமையை உறுதி செய்ததுடன் அதன் முடிவுகள் இரகசியமானது எனவும், தன்னால் அதனை வெளிப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
இதன்போது அவரிடம் தகவல் கேட்ட ஊடகவியலாளர் குறித்த வைத்தியசாலை குடி நீர் பிரச்சினை தனிப்பட்ட ஒருவருடைய விடயம் அல்ல நீங்கள் எவ்வாறு இரகசியமானது எனவும் கூற முடியும் எனக் கேட்டதற்கு, பதில் வழங்கிய பொறியியலாளர் சட்ட சிக்கல் வந்தாலும் என்பதற்காக கூறவில்லை என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”