ஸ்காட்லாந்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? போட்டியில் முந்தும் கேத் போர்ப்ஸ்!!
பிரிட்டனின் ஸ்காட்லாந்து முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த நிக்கோலா ஸ்டர்ஜன், தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்காட்லாந்து முதல்-மந்திரியாக பதவி வகித்த முதல் பெண் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முதல்-மந்திரி என்ற பெருமையை பெற்றவர். ஆளுங்கட்சியான ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்து உள்ளார். நிக்கோலா ஸ்டர்ஜன் கொண்டு வந்த பாலின சீர்திருத்தங்களுக்கு அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.
நிக்கோலா ஸ்டர்ஜன் பதவி விலகும் நிலையில், அடுத்த முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் தற்போதைய துணை முதல் மந்திரி ஜான் ஸ்வின்னி, நிதி மந்திரி கேத் போர்ப்ஸ், வெளியுறவுத்துறை மந்திரி ஆங்கஸ் ராபர்ட்சன், சுகாதாரத்துறை மந்திரி ஹம்சா யூசப், பாராளுமன்ற உறுப்பினர்கள் நீல் கிரே, மாரி மெக்கலன், கெய்த் பிரவுன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஸ்காட்லாந்தின் புதிய முதல்-மந்திரியாக கேத் போர்ப்ஸ் (வயது 32) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிதி மற்றும் பொருளாதாரத்திற்கான மந்திரியாக உள்ள அவர் கட்சியில் 2-வது இடத்தில் இருக்கிறார். கேத் போர்ப்சுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் சிறுவயதில் இந்தியாவில் தங்கி படித்து வளர்ந்து உள்ளார்.
33 வயதாகும் கேத் போர்ப்ஸ், ஸ்காட்லாந்தின் டிங்வாலில் பிறந்தார். அவர் தனது குழந்தை பருவத்தை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவிலும், இந்தியாவிலும் கழித்தார். அவரது தந்தை கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். பைபிள் போதனையில் ஈடுபட்ட அவர் தொண்டு நிறுவன ஆஸ்பத்திரிகளின் நிதிகளை நிர்வகிக்கும் கணக்காளராகவும் இருந்தார்.
கேத் போர்ப்ஸ் 10 வயதாக இருக்கும்போது அவரது குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. பஞ்சாப்பின் லூதியானாவில் குடியேறினர். அங்குள்ள பள்ளியில் கேத் போர்ப்ஸ் படித்தார். பின்னர் தனது 15 வயதில் அவர் ஸ்காட்லாந்துக்கு திரும்பினார். கேத் போர்ப்ஸ் முன்பு அவரது பேட்டியில், தான் இந்திய பள்ளியில் பயின்ற அனுபவத்தை பற்றி பெருமையாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.