விமானத்தை வீடாக மாற்றி வசிக்கும் என்ஜினீயர்!!
பல வசதிகளுடன் கூடிய கார், வேன், பஸ் போன்ற வாகனங்களை வீடு போல மாற்றி பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் விமானத்தை வீடாக பயன்படுத்தும் மனிதரை பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் ஓரிகான் நகரை சேர்ந்தவர் புரூஸ் கேம்பல். 64 வயதான இவர் ஓய்வுபெற்ற எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர் அங்குள்ள போர்டலேன்ட் பகுதியில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் போயிங் 727 ரக விமானத்தை நிறுத்தி வைத்துள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு முதல் இந்த விமான வீட்டில் தான் புரூஸ் கேம்பல் வசித்து வருகிறார். இதற்காக விமானத்தில் மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி விமானத்தில் படுக்கை வசதி, குளியலறை, சமையல் அறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் வீட்டு உபயோக சாதனங்களையும் அந்த விமானத்திலேயே வைத்துள்ளார். இதுபோன்ற போயிங் 727 விமானங்கள் கடந்த 1960-ல் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 250 விமானங்களை தயாரிக்கும் திட்டத்துடன் 1963-ல் உற்பத்தி தொடங்கப்பட்டது.
இந்த விமான வீட்டில் 189 பேர் வரை வசிக்க முடியும். 1 லட்சம் டாலர்கள் செலவு செய்து இந்த விமானத்தை அவர் வாங்கி உள்ளார். இந்த விமான வீட்டில் அவ்வப்போது வசதிகளை மேம்படுத்தி வரும் புரூஸ் கேம்பல் விமான வீடு தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். அந்த வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன.