திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஹெலி பேடு வசதியுடன் ரூ.300 கோடியில் நவீன மருத்துவமனை விரைவில் கட்ட ஏற்பாடு!!
திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவைசிகிச்சை மருத்துவமனையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார். 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். கடந்த 15 மாத காலத்தில், இங்கு 1,110 குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசின் ஆரோக்ய ஸ்ரீ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்னமய்யா மாவட்டம் சிட்டி வேல் மண்டலம் கே.எஸ்.ஆர். அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்போது உடல்நிலை தேறி இன்னும் ஒருவார காலத்தில் வீடு திரும்ப உள்ளார். ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இங்கு கட்டப்படுகிறது.
இந்த மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருப்பதி மலைஅடிவாரத்தில் சிற்ப கலாசாலையை பார்வையிட்ட அவர் இங்கு செதுக்கப்படும் சிலைகளை விற்பனை செய்ய கவுன்டர் அமைக்கப்படும் என்றார்.