;
Athirady Tamil News

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும்- சீமான்!!

0

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசின் மனச்சான்றற்ற செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும், வீதியில் இறங்கி போராடியும் கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போலத் தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை என்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..

* அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும். * அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். * அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையாக மாற்றித் தரவேண்டும்.

* பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும். * மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். * மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் அளிக்கும் நரம்பியல் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நரம்பியல் மருத்துவர்கள் உறுதியாகப் பணியமர்த்தப்பட வேண்டும்

* மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் சுழற்சி முறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதோடு, அம்மருத்துவ முகாம்களிலேயே அவர்களுக்கான பேருந்து மற்றும் ரயில் பயண, கட்டண சலுகை அட்டையைப் புதுப்பிக்கும் வசதியை செய்துதர வேண்டும். * மாற்றுத்திறனாளிகளுக்கான மின்கல சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்க்கும் சேவை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

* உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். * அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் கழிவறை வசதிகளை உடனடியாக அமைத்துதர வேண்டும். அடிப்படை உரிமைகளான மேற்கண்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தந்து, அனைவரையும் போலவே மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.