தலிபான் ஆட்சியாளர்கள் இடையே கருத்து மோதல் – பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்திய ஆப்கன் அமைச்சர்!!
ஆப்கன் ஆட்சியாளர்களிடையே கருத்து மோதல் இருப்பது தெரியும் வகையில் உள்துறை அமைச்சர் சிராஜுதின் ஹக்கானி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கனிஸ்தானில் செல்வாக்கு மிக்க பயங்கரவாத அமைப்பான தலிபான்கள், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் மீண்டும் அங்கு ஆட்சியைப் பிடித்தார்கள். இதற்கு முன் இருந்ததுபோல், இம்முறை தங்கள் ஆட்சி இருக்காது என்றும், சர்வதேச சமூகத்துடன் நல்லுறவை பேண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆப்கன் அரசு முன்னெடுக்கும் என்றும் கூறி இருந்தனர். தலிபான் ஆட்சியாளர்களுக்கு பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. தலிபான் ஆட்சியாளர்களுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அது வேண்டுகோள் விடுத்தது.
எனினும், ஆட்சிக்கு வந்தது முதல் ஆப்கன் அரசில் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பது உலகிற்கு தெரியாத ஒன்றாகவே இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில், 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க ஆப்கன் அரசு கடந்த டிசம்பரில் தடை விதித்தது. தலிபான்களின் தலைவரான ஹிபதுல்லா அகுண்ட்சதாவின் உத்தரவின் பேரிலேயே இந்த தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தரவை அடுத்து பெண்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த தடையை ஆப்கன் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது. தலிபான்களின் இந்த உத்தரவு அதன் முந்தைய அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும், அவர்களின் ஆட்சி முறையில் மாற்றம் வெளிப்படவில்லை என்றும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. பெண்கள் இடைநிலை கல்வி வரை கற்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், தற்போது அதற்கு எதிராக 6ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்க அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இஸ்லாமிய மத கல்விக்கான பட்டமளிப்பு விழா கோஸ்ட் பிராந்தியத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஆப்கன் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி, ”அதிகாரத்தை ஏகபோகமாக மாற்றுவதும், ஒட்டுமொத்த அமைப்பின் பெயரை சிதைப்பதும் நன்மையை தராது. இது (பெண் கல்விக்கு தடை விதிப்பது) பொறுத்துக்கொள்ள முடியாதது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருப்பதன் மூலம் நமக்கு பொறுப்பு கூடி இருக்கிறது. பொறுமையுடனும், நல்ல அணுகுமுறையுடனும் நாம் நடந்து கொள்வது மிகவும் முக்கியம். இதேபோல், மக்களோடு நாம் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களின் காயங்களைப் போக்க வேண்டும். நமது நடவடிக்கை நம்மையோ நமது மதத்தையோ வெறுக்கும்படியாக இருக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஹிபதுல்லா அகுண்ட்சதாவின் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை என்ற போதிலும், அவரை குறிப்பதாகவே ஹக்கானியின் பேச்சு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஹக்கானி பேசியதன் வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தலிபான்களுக்குள் இருக்கும் கருத்து மோதலை வெளிப்படுத்துவதாக இது இருப்பதாகவும், இவ்வாறு அவர்கள் பொது வெளியில் பேசுவது மிகவும் அரிது என்றும் மைக்கேல் குகில்மென் என்பவர் கூறி இருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த வில்சன் சென்டர் என்ற சர்வதேச அமைப்பின் ஆசிய துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
தலிபான் அரசியல் தலைவர்கள் விசாலமான பார்வை கொண்டவர்களாக இருந்தாலும், மத தலைவர்கள் பழமைவாதிகளாகவே இருப்பதாகவும், துறவிகளைப் போல வாழும் அவர்கள் அரசின் தினசரி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதில்லை என்றும், ஆனாலும் முக்கிய முடிவுகளை அவர்கள்தான் எடுக்கிறார்கள் என்றும் மைக்கேல் குகில்மென் தெரிவித்துள்ளார். தலிபான்களின் தலைவரான ஹிபதுல்லா அகுண்ட்சதா பெரும்பாலும் தலைநகர் காபூலுக்கு வருவதில்லை என்றும், அவர் கந்தஹாரிலேயே இருப்பதாகவும் மைக்கேல் குகில்மென் தெரிவித்துள்ளார்.
ஹக்கானியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா முஜாஹெத், கருத்து வேறுபாடுகள் இருப்பது தவறு இல்லை என்றும், ஆனால் அதனை பொது வெளியில் சொல்வது தவறு என்றும் கூறியுள்ளார். ஆப்கன் ஆட்சியாளர்களிடையே உள்ள கருத்து மோதல் வெளிப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது.