புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்- மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது!!
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு செலவீனங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 2023-24-ம் நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக அனைத்து துறைகளும் முழு வீச்சில் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி கடந்த 26-ந்தேதி மாநில திட்டக்குழு கூடி ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் திட்ட வரையறையாக மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுவைக்கான மத்திய அரசின் நிதியுதவி ரூ.3.117.17 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர். இதனால் புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.