பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால் சர்ச்சை!!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் தவறான நிர்வாகமே இதற்கு காரணமாகும். மாவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ நெய் பாகிஸ்தான் மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை நமக்கு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். நெய் விலையை 60 ஆயிரம் கோடி ரூபாய் என வாய் தவறி இம்ரான்கான் பேசியது அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை வைத்து பலரும் அவரை கேலி செய்து வருவதுடன் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.