திமுக-நாம் தமிழர் இடையே கடும் மோதல்.. ஈரோடு கிழக்கில் நாதக நிர்வாகி மண்டை உடைப்பு.. ஒரே பரபரப்பு !! (படங்கள்)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று ஈரோடு ராஜாஜி புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசின் மண்டை உடைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்துள்ளது. காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதனால் 2 ஆண்டு திமுக கூட்டணி ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண் இதுவாக இருக்கும். இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க காங்கிரஸை காட்டிலும் திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. விரைவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஈரோடு கிழக்கில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
தொகுதியில் தலைவர்கள் முகாம்
இதுதவிர தற்போது ஈரோடு கிழக்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என ஏராளமானவர்கள் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
திமுக-நாம் தமிழர் மோதல்
இந்நிலையில் தான் ஈரோடு ராஜாஜிபுரத்தில் இன்று அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியது. இதையடுத்து இருகட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
மண்டை உடைப்பு
இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசுவின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் இந்த தாக்குதலை நாம் தமிழர் கட்சியினர் கண்டித்தனர். மேலும் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். அன்பு தென்னரசை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு கோஷமிட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.