;
Athirady Tamil News

72 பேரை பலி கொண்ட நேபாள விமான விபத்து: பைலட் பண்ண தப்புதான் காரணமா?..வெளியான திடுக்கிடும் தகவல் !! (படங்கள்)

0

நேபாளத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 72 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

பண்டிகை தினத்தன்று நடைபெற்ற இந்த பயங்கர விபத்து அந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

72 பேரும் பலியாகினர்

யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடி.ஆர் 72 என்ற அந்த விமானம் பொகாரா நகரில் தரையிறங்க முயற்சித்த போது சேதி ஆற்றின் கரையில் மோதி தீ பிடித்து விபத்தில் சிக்கியது. நேபாள நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்துக்களில் ஒன்றாக இது அமைந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 72 பேரும் பலியாகினர். 71 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. ஒருவரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டன.

5 பேர் கொண்ட விசாரணைக்குழு

விமான விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விமானத்தின் இரு என்ஜின்களும் செயல் இழந்து போனதால் இந்த விமான விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல் வெளியானது. எனினும் விமானியின் தவறுதலால் என்ஜின் செயல் இழப்பு ஏற்பட்டதா? அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. விபத்து குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.

மனித தவறுகள் காரணமா?

இந்த நிலையில், இந்த விபத்துக்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விமானத்தின் இரு விமானிகளில் ஒரு விமானி, விமானம் தரையிறங்குவதற்கான லேண்டிங் லிவரை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக விமானத்தின் என்ஜின் பவரை ஜீரோவாக கொண்டு வரும் லிவரை பயன்படுத்தியதால் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று முதன்மை அறிக்கையில் உள்ள தகவல்கள் கசிந்துள்ளன.

இரு முறை விமானி குறிப்பிட்டுள்ளதாக

மேலும் இரு என்ஜின்களும் நின்று போனதால் விமானத்தின் உந்து ஆற்றல் செயல் இழந்து கீழே விழுந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் இரு என்ஜின்களும் செயல் இழந்து போவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானது என்றும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானம் தரையிறங்குவதற்கான ஒப்புதல் கொடுத்த போது விமானி என்ஜினில் இருந்து எந்த ஆற்றல்யும் (power) வரவில்லை என்று இரு முறை விமானி குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

30 நாட்களுக்குள் முதல்கட்ட அறிக்கை

இந்த விபத்து தொடர்பான விரிவான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் விசாரணைக்குழு உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளின் படி விமான விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள் முதல்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விபத்து நடைபெற்று ஒராண்டுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். உலக அளவில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.