;
Athirady Tamil News

தெலுங்கு வந்தேறிகள் என சீமான் பேச்சு- ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளரை விரட்டியடித்த அருந்ததியர்!! (படங்கள்)

0

ஈரோடு:அருந்ததியர் சமூகத்தினரை தெலுங்கு வந்தேறிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, வாக்கு சேகரிக்க சென்ற போது சீமான் பேச்சை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தனர் அருந்ததியர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். மேனகாவை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான் ஜாதிய அடிப்படையில் வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா? என்றார்.

மேலும் இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார்.

சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சீமானின் அருந்ததியர்- தெலுங்கு வந்தேறிகள் என்ற பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக தமிழ்ப் புலிகள் கட்சியின் முத்துக்குமார் கூறுகையில், அருந்ததியர் வந்தேறிகள் என்பதை சீமான் நேரடியாக சொல்லி இருக்கிறார்கள். விஜயநகர பேரரசிடம் முதலியார்கள் மறுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? சீமான் பேசுவதற்கு ஆதாரமே இருக்காது. ஜாதி ரீதியாக பிளவு வாய்க்கு வந்ததை உளறுவதே சீமானின் வேலை. ஓட்டுக்காக ஒரு சமூக மக்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்பவர்தான் சீமான். ஆர்.எஸ்.எஸ். கொடுத்த அஜெண்டாவை செய்து வருகிறார் சீமான் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா வாக்கு சேகரிக்க சென்றார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அருந்ததியரை தெலுங்கு வந்தேறிகள் என சீமான் சொல்வாராம்.. இவங்க எங்ககிட்ட வந்து ஓட்டு கேட்பாங்களாம் என நாம் தமிழர் கட்சி வேட்பாளரை நோக்கி அவர்கள் ஆவேசப்பட்டனர். இதனால் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க முடியாமல் உடனடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.