இவர்கள்தான் சட்டப்பூர்வ சிவ சேனா… ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்!!
மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
அதன்பின்னர் சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் வில், அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.
இதேபோல் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். ‘ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,’ என்று உத்தவ் குறிப்பிட்டார். இரு தரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இன்று உத்தரவு பிறப்பித்தது.
உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா தான் சட்டப்பூர்வமான சிவ சேனா என்று கூறியது. அத்துடன், சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் வில், அம்பு சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட உத்தவ் தரப்பு முடிவு செய்துள்ளது.