புரோமோஷன் வீடியோவில் ஹிஜாப் போராட்ட க்ளிப் – இந்தியப் பயணத்தை ரத்து செய்த ஈரான் அமைச்சர்!!
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசேன் அமீர் அப்துல்லாஹியான் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சகமும், அப்சர்வர் ரிசேர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ரைஸினா டயலாக் நிகழ்ச்சியில் ஹொசேன் அமீர் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்டிருந்த புரோமோஷனல் வீடியோவில் ஈரானியப் பெண் ஒருவர் ஹிஜாபை எதிர்த்து தனது தலைமுடியை வெட்டும் காட்சியும், அருகில் ஈரான் தலைவர் இப்ரஹிம் ரைஸி படம் இருப்பதுபோலவும் ஒரு காட்சியும் இடம்பெற்றிருந்தது. இதனால், ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஈரான் அரசு முறைப்படி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளியிடப்பட்ட நிலையில், பயணம் ரத்து செய்யப்படுவதை இப்போது ஈரான் அறிவித்துள்ளது.
ரைஸினா உரையாடல் மாநாடு (Raisina Dialogue) என்பது ஆண்டுதோறும் இந்தியா நடத்தும் உலகளாவிய விவகாரங்களின் மாநாடாகும். இந்த ஆண்டுக்கான மாநாடு மார்ச் 3, 4 தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில், நிகழ்ச்சிக்கான புரோமோஷனல் வீடியோவில் இடம்பெற்றிருந்த சர்ச்சை க்ளிப்பை நீக்குமாறு ஈரான் வலியுறுத்தியது. ஆனால், அந்த வீடியோவில் குறிப்பிட்ட அந்தக் காட்சி இதுவரை நீக்கப்படாததால் ஈரான் வெளியுறவு அமைச்சர் மாநாட்டுக்கான தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.