கேரளாவுக்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் 408 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!!
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று கொச்சி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணி ஒருவரின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அந்த பயணி அணிந்திருந்த பெல்டில் தங்கம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதில் இருந்து 407.85 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20.24 லட்சம் ஆகும். அந்த பயணியை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர் யாருக்காக தங்கம் கடத்தி வந்தார், இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள்.