மகா சிவராத்திரி: காளஹஸ்தி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவையொட்டி தினமும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது.
மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுவதால் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில அரசு சார்பில் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, மதுசூதன் ரெட்டி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டுவந்து காளகஸ்தி கோவில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.