திருப்பதி லாட்ஜ் அறையில் சேலம் ஜவுளி வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை!!
சேலத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40).இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நிர்மலா வஸ்திரா (36). பாலாஜி வியாபாரம் செய்வதற்காக வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளார். மேலும் உறவினர்கள் அக்கம்பக்கத்தினரிடம் ரூ 20 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை பாலாஜியால் திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாலாஜிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் விரக்தி அடைந்த பாலாஜி, தனது மனைவியுடன் கடந்த 15-ந் தேதி திருப்பதிக்கு வந்தார். திருப்பதி பெத்தகாப்பு லே-அவுட் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். கடந்த 2 நாட்களாக பாலாஜியும், அவரது மனைவியும் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது பாலாஜி அவரது மனைவி நிர்மலா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கினர். இதுகுறித்து திருப்பதி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எஸ். வி.மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலாஜி தங்கி இருந்த அறையில் இருந்து அவரது செல்போன் மற்றும் ரெயில் டிக்கெட்களை வைத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.