;
Athirady Tamil News

தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட12 சிறுத்தைகள்!!

0

சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கி புலி கண்டுபிடிக்கப் படவில்லை. இதையடுத்து சீட்டாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்நாட்டில் இருந்து 8 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இதில் 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் ஆகும். இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசிய பூங்காவில் திறந்துவிட்டார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை கொண்டு வர இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் கடந்த 16-ந்தேதி புறப்பட்டு சென்றது. அங்கு 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.

சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும். அவைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து திறந்து விடுகிறார்கள். மேலும் 12 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.