“மேற்கத்திய நாடுகளின் சதி!” ஆப்கானில் கருத்தடை சாதனங்களை தடை செய்த தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் தலிபான்கள், தற்போது கருத்தடை சாதனங்களுக்கும் தடை விதித்துள்ளனர்.
உலகிலேயே பிரசவ உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களும் இல்லையென்றால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உலகில் முஸ்லிம்களின் மக்கள்தொகையைக் குறைப்பதற்காக, மேற்கத்திய நாடுகள் செய்த சதியே கருத்தடை சாதனங்கள் எனக் கூறியிருக்கும் தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் இனி எங்கும் இவை விற்கப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
மூடத்தனமாக கட்டுப்பாடுகள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டு முழுமையாக வெளியேறின. அது முதலாக, அங்கு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். நாங்கள் பழைய மாதிரி இல்லை என்றும், பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிப்போம் எனவும் கூறி ஆட்சியில் அமர்ந்த தலிபான்கள், மெல்ல மெல்ல தங்கள் சுயரூபத்தை காட்டத் தொடங்கினர். பெண்கள் பர்தா அணிந்துதான் வெளியே வர வேண்டும்; ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது; உயர் கல்வியில் பெண்கள் சேரக்கூடாது, ஆண் மருத்துவரிடம் பெண்கள் வைத்தியம் பார்க்கக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.
தலிபான்கள்
தலிபான்களின் இந்தக் கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் எனக் கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தப் போராட்டங்களுக்கு தலிபான்கள் பணியவில்லை. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்கள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
கருத்தடை சாதனங்களுக்கு தடை
இந்த சூழலில்தான், தலிபான்கள் உச்சக்கட்ட அராஜகமாக ஒரு கட்டுப்பாட்டை விதித்திருக்கின்றனர். அதாவது, கருத்தடை சாதனங்கள் ஏதும் ஆப்கானிஸ்தானில் இனி விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர் தலிபான்கள். இது, பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய அடக்குமுறையாகப் பார்க்கப்படுகிறது. குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையைக் கூட, பெண்களிடம் இருந்து பறிக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் எச்சரிக்கை
இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஆப்கன் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், தலிபான்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, முஸ்லிம் மக்கள்தொகையைக் குறைக்க மேற்கத்திய நாடுகள் செய்த சதிதான் கருத்தடை சாதனங்கள் என்றும், அதை இனிமேலும் ஆப்கானிஸ்தானில் அனுமதிக்க முடியாது எனவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதிக அளவிலான பிரசவ உயிரிழப்புகளும், போதிய மருத்துவ வசதிகளும் இல்லாத ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களும் தடை செய்யப்பட்டால் கர்ப்பிணிப் பெண்களின் உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என பல்வேறு உலக நாடுகள் எச்சரித்துள்ளன.