;
Athirady Tamil News

“ஐந்தே நாட்கள்!” கொதிக்கும் வெப்பம் டூ உறைய வைக்கும் பனி! தலைகீழ் மாற்றம்! மிரளும் அர்ஜெண்டினா மக்கள்!!

0

அர்ஜெண்டினாவில் வெறும் 5 நாட்களில் வானிலை தலைகீழாக மாறியுள்ளது. மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெப்பம் இருந்த நிலையில், அது அப்படியே உறைய வைக்கும் அளவுக்குக் குறைந்துள்ளது.
மனிதர்கள் வளர்ச்சி என்ற பெயரில் செய்யும் பல்வேறு பணிகள் காரணமாக உலகம் தொடர்ந்து மாசடைந்தே வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப மயமாதல் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, வானிலை ரொம்ப மோசமானதாக மாறுகிறது. வெப்பமானாலும் சரி, குளிரானாலும் சரி மிக மிக மோசமான நிலை ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளிலும் இப்படிதான் வானிலை சுழன்றடித்துச் செய்கிறது.

அர்ஜெண்டினா
இதனிடையே தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினாவிலும் இப்போது மோசமான வானிலை பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அங்கு இப்போது ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களைக் கண்டு ஆய்வாளர்கள் குழம்பிவிட்டனர். அதாவது அங்கு வெறும் 5 நாட்களில் வானிலை தலைகீழாக மாறியுள்ளது. மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெப்பம் இருந்த நிலையில், அது அப்படியே உறைய வைக்கும் அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களும் கூட பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஐந்தே நாட்கள்
வெறும் 5 நாட்களில் அங்கு வெப்ப அலைகளில் இருந்து பனிப்பொழிவுக்கு வானிலை மாறியுள்ளது. அங்குக் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 38.1 C (100.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் இருந்தது. இருப்பினும், சில நாட்களில் அதாவது நான்கு நாட்களில் வெப்பம் குறைந்து, வியாழக்கிழமை வெப்பம் 7.9C (46.2 டிகிரி பாரன்ஹீட்) ஆகக் குறைந்தது. அங்குக் கடந்த 100 ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் பதிவான மிகக் குறைந்த வெப்பம் இதுவாகும். முன்னதாக 1951இல் பிப்ரவரி மாதம் அங்கு வெப்பம் 4.2C ஆக இருந்தது.

தலைகீழ் மாற்றம்
தென் அமெரிக்க நாடுகளில் இப்போது கோடைக் காலம் நிலவி வருகிறது. அர்ஜெண்டினாவில் கடந்த வாரம் வரை வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. கடந்த வாரம் தான் கோடைக் காலத்தின் எட்டாவது வெப்ப அலையை எதிர்த்து அர்ஜெண்டினா போராடியது.. ஒரு கட்டத்தில் அங்கு வெப்ப நிலையில் 40C (104F) வரை கூட சென்றது. இருப்பினும், அங்கு சில நாட்களில் வானிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. சியரா டி லா வென்டானா மலைகளின் தாழ்வான சிகரங்களில் பனிப்பொழிவு ஏற்படத் தொடங்கியது. அங்கு வெப்பநிலை -4 C வரை கூட சென்றது.

என்ன காரணம்
அண்டை நாடான சிலியிலிருந்து ஆண்டிஸ் மலைப் பகுதியைக் கடந்து மத்திய அர்ஜெண்டினாவிற்குள் தென் துருவத்தில் இருந்து வரும் குளிர்ந்த காற்று காரணமாகவே வெப்பநிலை இப்படி தலைகீழாக மாறியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் மண்டையைப் பிளக்கும் வெப்பம் என்பது கட்டும் பனியாக மாறியுள்ளது. கடந்த வாரம் வரை வியர்க்க விறுவிறுக்க ஓடிக் கொண்டிருந்த மக்கள், இப்போது குளிரில் இருந்து தப்ப குளிர்ந்த கோட்களை அணியத் தொடங்கியுள்ளனர்.

லா நினா
மேலும், இந்த திடீர் வானிலை மாற்றம் என்பது லா நினா வானிலை நிகழ்வால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. லா நினா என்பது காற்று மற்றும் மண்ணை வழக்கத்தை விட வறண்டதாக மாற்றுகிறது. இதன் காரணமாக வெப்ப நிலை திடீர் திடீரென மாறும். இந்த லா நினை நிகழ்வு காரணமாகவே அங்கு வெப்பநிலை சில நாட்கள் இடைவெளியில் உச்சத்தில் இருந்து சரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வானிலை
இப்போது உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெப்ப நிலை கடந்த ஆண்டு 100 செல்சியஸை தாண்டி உச்சம் தொட்டது. கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இதே நிலை. அதேபோல ஜெர்மனி மற்றும் சீனா நாடுகளில் பெய்த மிகக் கடுமையான வெள்ளமும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்படி திடீர் திடீரென ஏற்படும் வானிலை மாற்றம் அனைத்து உயிரினங்களையும் கடுமையாகப் பாதிக்கவே செய்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.