;
Athirady Tamil News

பிரதமரை விமர்சித்த அமெரிக்க தொழிலதிபர்- மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி பதிலடி!!

0

அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ் ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பருவநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் என்ற தலைப்பில் பல்கலைக்கழகத்தில் பேசிய ஜார்ஜ் சொரோஸ் இந்தியா, பிரதமர் மோடி, அதானி குறித்து பேசினார். அவர் பேசுகையில், இந்தியா சுவாரசியமான நாடு. இந்தியா ஜனநாயக நாடு ஆனால் அந்நாட்டின் தலைவர் நரேந்திரமோடி ஜனநாயகமானவர் அல்ல.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. ஆனால், மிகவும் தள்ளுபடி விலையில் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி அதில் அதிக பணம் சம்பாதிக்கிறது. மோடியும், தொழிலதிபர் அதானியும் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் விதி பின்னிப்பிணைந்துள்ளது. அதானி நிறுவனம் பங்குச்சந்தை மூலம் நிதி பெற முயற்சித்து தோல்வியடைந்தது. பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக அதானி மீது குற்றச்சாட்டு உள்ளது.

அவரின் பங்குகள் சீட்டுக்கட்டு போல சரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக உள்ளார். ஆனால், பாராளுமன்றத்திலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்க வேண்டும். அதானி விவகாரம் இந்திய அரசில் மோடியின் வலிமையை குறைக்கும். மேலும், இது கட்டாயம் தேவைப்படும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான கதவுகளை உந்தி தள்ளும். நான் அனுபவமில்லாதவனாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சொரோஸ் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கூறுகையில், தனது மோசமான செயல்களை வெற்றிபெற செய்ய வளைந்துகொடுக்கும் அரசு வேண்டுமென்று ஜார்ஜ் சொரோஸ் நினைக்கிறார். அவரது பேச்சில் இருந்தே பிரதமர் மோடி போன்ற தலைவர்களை குறிவைக்க 1 மில்லியன் டாலர்களை நிதி உதவி வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. ஜார்ஜ் சொரோஸ் இந்திய ஜனநாயகத்தை அழித்து அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மூலம் அரசை நடத்த முயற்சிக்கிறார். நாம் வெளிநாட்டு சக்திகளை கடந்த காலங்களில் முறியடித்துள்ளோம்… மீண்டும் முறியடிப்போம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.