;
Athirady Tamil News

மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு யானை – காப்பாற்றிய வனத்துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

0

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பாரகி அருகே பந்திப்பூர் வனப்பகுதி எல்லைக்குட்பட்ட ஓம்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், காட்டு யானைகளிடம் இருந்து பயிரைக் காப்பாற்ற தனது தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் உணவு தேடி வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த விவசாயியின் தோட்டத்துக்குள் செல்ல முயன்றது. அந்த யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடியது.

அப்பகுதி மக்கள் உடனடியாக பந்திப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பந்திப்பூர் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களை வரவழைத்து மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காட்டு யானைக்கு அதேப்பகுதியில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவ குழுவினரின் 10 மணி நேர தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த காட்டு யானை உயிர் பிழைத்தது. இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. மேலும் அந்த யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். Also Read – எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் – நிதிஷ்குமார் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காட்டு யானைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினருக்கும், மருத்துவ குழுவினருக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், காட்டு யானையின் உயிரைக் காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினரையும், மருத்துவ குழுவினரையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் ஆகியோர் வெகுவாக பாராட்டி உள்ளனர். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் படத்தை பதிவிட்டு, இதனைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகள். நம்முடைய மக்கள் இத்தகைய பரிவு காட்டுவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது என பதிவிட்டிருந்தார். இதேபோல், மத்திய வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவும் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.