வைத்தியசாலை புனரமைப்பு நிதி வேறு தேவைக்கு !!
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் வைத்தியசாலையை புனரமைக்குமாறு கிராம பொது அமைப்புகள் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடம் மனுக் கையளித்துள்ளனர்.
1953ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடம் தற்போது உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.
இவ் வைத்தியசாலையினை நம்பி ஆனைவிழுந்தான் மற்றும் வன்னேரிக்குளம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள் வாழ்கின்றன.
60 ஆண்டுகளுக்கு மேலாக வைத்தியசாலைக் கட்டடம் புனரமைக்கப்படாததன் காரணமாக பலமான சேதம் அடைந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் கடந்த காலங்களில் இவ் வைத்தியசாலை புனரமைப்பதற்கு என ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு வேலைகளுக்கும் பிற இடங்களுக்கும் ஒதுக்கப்பட்டதாக அறிகின்றோம்.
இந்நிலையில், வைத்தியசாலையினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பொது அமைப்புகளாகிய நாம் தங்களிடம் பணிவாக வேண்டுகின்றோம் எனக் கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வன்னேரிக்குளத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வன்னேரிக்குளம் வைத்தியசாலை புனரமைப்புக்கு என ஒதுக்கப்பட்ட ரூபாய் 40 மில்லியன் நிதி வேறு தேவைக்கு சுகாதார தரப்பால் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.